வேன் டயர் வெடித்து கவிழ்ந்தது: 13 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே கோவில் திருவிழாவுக்கு சென்றபோது நான்கு வழிச்சாலையில் பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி அன்னக்கிளி (60). இவர் தனது மகள் அன்னலட்சுமி (30), பேரன் சரவணகுமார் மற்றும் உறவினர்களான ஜெயப்பிரகாஷ் மனைவி தனலட்சுமி (35), அவரது மகன் தருண்பாண்டியன் (13), டென்சிராணி (30), செல்வராஜ் மகன் அசோக்குமார் (28), தமிழ்மணி மனைவி சந்திரா (35) உள்ளிட்ட 12 பேருடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றானில் உள்ள கோவில் திருவிழாவுக்கு நேற்று புறப்பட்டனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய ஆண்டனி (20) என்பவர் ஓட்டினார். காலை 11.30 மணியளவில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் பகுதியில் வேன் வந்து கொண்டு இருந்தபோது, திடீரென்று வேனின் பின்பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. பின்னர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனின் இடிபாடுகளில் சிக்கிய அனைவரும் படுகாயம் அடைந்து அலறினார்கள். அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் எட்டயபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வேனில் சிக்கி படுகாயம் அடைந்த அன்னக்கிளி உள்பட 13 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வேன் விபத்துக்குள்ளான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் தற்போது சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.