15வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திருப்புவனத்தில் 15வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்;

Update: 2025-07-29 05:21 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகிலுள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற புகாரின் அடிப்படையில், சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ, ஜூலை 12ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. ஜூலை 14ஆம் தேதி விசாரணை தொடங்கப்பட்டது. எஸ்.பி. ராஜ்பீர் மற்றும் டி.எஸ்.பி. மோஹித் குமார் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ, 15வது நாளாக விசாரணையை அஜித் குமாரின் வீட்டில் இருந்து ஆரம்பித்துள்ளது. அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் மற்றும் தாய் மாலதியை, ஏழு பேர் கொண்ட இரண்டு சிபிஐ குழு நேரில் சென்று விசாரணை செய்தது. இதில் ஒரு குழுவினர், ஆதார் கார்டும், புகைப்படங்களும் தேவை எனக் கூறி, இருவரையும் காரில் ஏற்றி மதுரையிலுள்ள ஆத்திக்குளம் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். மற்றொரு குழு, திருப்புவனம் காவல் நிலையத்திலும் அதன் பின்புற காவலர் குடியிருப்பிலும் விசாரணை மேற்கொண்டது. அங்கு வசித்துவரும் தலைமை காவலர் கண்ணன் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவர் வீட்டை பூட்டி இருந்ததால் திருப்பி வந்து, அரைமணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டு பின்னர் புறப்பட்டுச் சென்றனர். அஜித் குமாரை விசாரித்தபோது வலிப்பு ஏற்பட்டதாகவும் அதனாலே உயிரிழந்ததாகவும் புகார் அளித்தவரே இந்த தலைமை காவலர் கண்ணன் என்பதும், அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Similar News