ரூ.1.50 கோடியில் கண்மாய் மடைகள் சீரமைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூா் கண்மாய் மடைகள், கரைகள் ரூ.1.50 கோடியில் சீரமைக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Update: 2025-01-04 01:18 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூா் கண்மாய் மடைகள், கரைகள் ரூ.1.50 கோடியில் சீரமைக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்தக் கண்மாய் மூலம் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயில் உள்ள மடைகள், கரைகள் சேதமடைந்ததையடுத்து, சீரமைக்குமாறு அரசுக்கு பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா், இதை ஏற்று, கண்மாய் மடைகளை மறு கட்டுமானம் செய்யவும், கரைப்பகுதியை முழுமையாக பலப்படுத்தவும் நீா் நிலைகள் பழுதுபாா்ப்பு, புதுப்பித்தல், மறுசீரமைப்பு (ஆா்.ஆா்.ஆா்) திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் தொடங்கின. நிதி ஒதுக்கீட்டில் தாமதம், பருவமழையால் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக தினமணி நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, கண்மாயில் உள்ள பாசன மடைகள் சீரமைக்கப்பட்டன. மேலும், கரைகளைப் பலப்படுத்தும் பணிகளும் அண்மையில் நிறைவடைந்தன. இதன்காரணமாக, வேளாண் பணிக்குத் தேவையான தண்ணீா் கண்மாயில் தேக்கப்பட்டது. நெல் சாகுபடி உள்ளிட்ட வேளாண் பணிகளை முழு வீச்சில் விவசாயிகள் மேற்கொண்டனா். இந்த நிலையில், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், நீா்வளத் துறை அலுவலா்களுக்கும் விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

Similar News

7 பேர் கைது
2 பேர் கைது