2 பேர் கைது
பவானி அருகே ஆயில் மில் டிரைவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கார் ஏற்றி கொலை செய்த உறவினரான மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் சொக்கனூர் காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 45). ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஜம்பையில் உள்ள அவருடைய அத்தை மகன் சேகருக்கு சொந்தமான ஆயில் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில், வெங்கடாசலம் உடலில் ரத்த காயங்களுடன் ஒலகடம் அருகே உள்ள வெடிக்காரன்பாளையம் பிரிவு என்ற இடத்தில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் காலை இறந்து கிடந்தார் இதுகுறித்து வெங்கடாசலத்தின் மனைவி மரகதம் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெங்கடாசலத்தின் அத்தை மகனும், மில் உரிமையாளருமான சேகரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், உறவினர் சேகர், மூர்த்தி ஆகியோருடன் வெங்கடாசலம் முந்தைய நாள் இரவில் மது குடித்த போது, வெங்கடாசலத்துக்கும், சேகருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின், வீட்டுக்கு காரில் சென்றபோதும் தகராறு ஏற்பட்டதால், வெடிக்காரன்பாளையம் பிரிவு அருகே வெங்கடாசலத்தை இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து சிறிது துாரம் சென்ற நிலையில், ஆத்திரம் அடங்காத சேகர், காரை திருப்பி வந்து நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடாசலத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சேகர், மூர்த்தியை கைது செய்த போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.