நகை வியாபாரியிடம் 2¾ கிலோ நகை கொள்ளை !
ரெயிலில் நகை வியாபாரியிடம் 2¾ கிலோ நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-06 08:35 GMT
கேரள மாநிலம் திருச்சூர் தாலுகா சேவலூர் பகுதியை சேர்ந்தவர் கிக்சன் (வயது 47). நகை வியாபாரியான இவர் கேரளாவில் ஆபரண நகைகளை பெரிய நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு நகைகள் செய்து கொடுப்பதற்காக அங்கு சென்று 2 கிலோ 800 கிராம் தங்கத்தை பெற்று வந்தார். பின்னர் அதனை தங்க சங்கிலிகளாக உருவாக்கினார். அந்த தங்க சங்கிலிகளை சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கொடுக்க முடிவு செய்தார். அதற்காக மொத்தம் 350 பவுன் தங்க நகைகளை ஒரு பையில் எடுத்து கொண்டு திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் செல்வதற்காக டிக்கெட் எடுத்தார். அவர் எஸ்-1 என்ற முன்பதிவு பெட்டியில் ஏறி சென்னைக்கு புறப்பட்டார். பெட்டியில் 63-வது சீட்டில் யாரும் இல்லாததால் அதில் உட்கார்ந்து பயணம் செய்தார். அப்போது நகைகள் வைத்திருந்த பையை அவர் தனது அருகே வைத்தார். ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது சிக்கனலுக்காக 10 நிமிடம் நின்றது. அப்போது தான் வைத்திருந்த ஒரு செல்போனுக்கு கிக்சன் சார்ஜர் போட்டார். மற்றொரு செல்போனை தனது பையில் வைத்துவிட்டு தூங்கி விட்டார். மறுநாள் காலை ரெயில் சேலம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது கண்விழித்து பார்த்த போது தான் வைத்திருந்த நகை பையை காணவில்லை. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1½ கோடி என்று கூறப்படுகிறது. மேலும் நகைகள் கொள்ளை போனது குறித்து கிக்சன் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.