சாலையில் சென்ற 2 பேர் மயங்கி விழுந்து பலி
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் சாலையில் சென்ற 2 பேர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் டவுன் மேட்டு மக்கான் தெருவை சேர்ந்தவர் அமீர் அலி (வயது 48). இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் டவுன் முகமதுபுறா பகுதியில் அமீர்அலி நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்து இறந்தாரா?, அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என்பது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சேலம் சாமிநாதபுரம் ராஜகண்ணு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (41). இவர் நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலாஜி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். வெயிலில் நடந்து சென்றபோது அவர் திடீரென மயக்கம் அடைந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.