பைக்கில் சென்றவரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன்புதூர் பகுதியில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா ஆசாரி மகன் அருண். இவர் செண்பகராமன் பகுதியிலுள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினம் அருண் தனது பைக்கில் வேலைக்கு சென்றார். குலசேகரன் புதூரில் உள்ள ஒரு கடையிலிருந்து கலெக்ஷனை பெற்றுக் கொண்டு தோவாளை கால்வாய் வழியாக சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வைத்து மர்ம நபர்கள் இரண்டு பேர் அவரை வழிமறித்து மிரட்டி, அருணிடம் இருந்த இரண்டு செல்போன், 5 கிராம் மோதிரம், 9 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு, கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர். இது குறித்து அருண் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அருண் - டம் வழிப்றியில் ஈடுபட்டது தோவாளை புதூரை சேர்ந்த அபிஷேக் (21) விசுவாசபுரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (21) என்பது தெரிய வந்தது. நேற்று தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கைதான அபிஷேக் மற்றும் முத்துராஜ் மீது ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட நான்கு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.