ஓட்டல் ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் சிக்கினர்
ஓட்டல் ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் சிக்கினர். போலீசார் நடவடிக்கை.
Update: 2024-06-24 05:46 GMT
ஈரோடு மாவட்டம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவர் உத்தமசோழபுரம் அருகே உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பஸ் ஏறுவதற்காக உத்தமசோழபுரம் மேம்பால இறக்கம் கோலமாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சீனிவாசனை வழிமறித்து மிரட்டி செல்போன், ரூ.1,000 ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சீனிவாசன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெரிய சீரகாபாடி அண்ணா நகரை சேர்ந்த அருள் பிரகாஷ் (வயது 18), நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் நாச்சிப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் சீனிவாசனிடம் பணம், செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.