நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 2200 பேருக்கு சிகிச்சை
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான "நம்மைக் காக்கும் 48" திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே "இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48" திட்டமாகும். இத்திட்டத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.
குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம். மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல் தனியார் காப்பீட்டிலோ அல்லது பணம் செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையில் அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனி நபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் மூலம் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, அரூர், பாலக்கோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் 3 தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48" திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சாலை விபத்தில் காயமடைந்த 2,200 நபர்களுக்கு ரூ.1.18 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 2021-2022 முதல் 2023-2024 தற்பொழுது வரை அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட 20 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்ற 22,800 பயனாளிகளுக்கு ரூ.30.01 கோடி செலவில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு வலைத்தளங்களில் (https://cmchistn.com) வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். விலை மதிப்பில்லாத மனித உயிரை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.