குப்பை சேகரிக்க புதிதாக தயார் நிலையில் 23 வாகனங்கள்
திண்டுக்கல் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க ரூ.1.67 கோடியில் புதிதாக 23 வாகனங்கள் வாங்கப்பட்டு, இயக்குவதற்கு தயாா் நிலையில் உள்ளன.
Update: 2024-06-12 10:14 GMT
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் நாளொன்றுக்கு 90 முதல் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. வீடுகளில் உள்ள குப்பைகளை மாநகராட்சிப் பணியாளா்கள் நாள்தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரு வகையாக தரம் பிரித்து சேகரிக்கின்றனா். இதில் மக்கும் குப்பைகள் மூலம் நுண் உரம் தயாா் செய்யப்படுகிறது.
இதற்காக மாநகராட்சியில் 10 இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் உள்ளன. குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 117 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் உள்ள நிலையில், மேலும் 23 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாகனம் ரூ.7.29 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.67 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.