பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது !
ஆறுமுகநேரியில் நள்ளிரவில் அரசு பஸ் டிரைவரை தாக்கியதுடன், பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-02 12:01 GMT
ராமேஸ்வரத்திலிருந்து திருச்செந்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு குளிர்சாதன வசதி கொண்ட அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை ராமேஸ்வரம் பாம்பன் நடுத்தெருவை சேர்ந்த குமார் (48) ஓட்டி வந்தார். கண்டக்டராக ராமநாதபுரம் பெருங்குளம் மேற்குத்தெரு பொன்னுப்பாண்டி மகன் கருணாமூர்த்தி (40) இருந்தார். இந்த பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணியளவில் ஆறுமுகநேரி ரயில்வே கேட் பகுதியில் வந்தது. அங்கு பராமரிப்பு பணிகள் நடந்ததால், ரயில்வே கேட் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வாகனங்கள் கேட் முன்னால் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பஸ்சில் அமர்ந்திருந்த டிரைவர் குமாரிடம் அப்பகுதியில் இருந்த 3 வாலிபர்கள் தீப்பெட்டி கேட்டு உள்ளனர். தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் குமாரிடம் தகராறு செய்தனர். திடீரென்று பஸ்சின் பின்பகுதிக்கு சென்ற அந்த 3 பேரும், அருகில் கிடந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. அந்த 3பேரையும், டிரைவரும், கண்டக்டரும் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த 3 பேரும் டிரைவரை சுற்றிவளைத்து நின்றவாறு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் காயமடைந்தார். அவரை மீட்க சென்ற கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த 3பேரும் தப்பி சென்று விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த டிரைவர் குமாரை போலீசார் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஆறுமுகநேரி ராமலட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவன் மகன் அஜித் (24), ஆறுமுகநேரி கணேசபுரம் கொம்பையா மகன் பிரேம்குமார்(25), ஆறுமுகநேரி கீழ நவலடிவிளை சின்னத்துரை மகன் சண்முகராஜ்(23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.