திருப்பூரில் கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் 3 பேர் கைது
திருப்பூரில் கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் 3 பேரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-21 10:50 GMT
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் வடக்கு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பாரப்பாளையம் பஸ் நிறுத்தும் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபினாஷ் குமார்(33), சமீம் அன்சாரி (33), அசாமை சேர்ந்த சுபம் சர்க்கார் (28) என்பதும், அவர்கள் பாரப்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநிலத்தவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.