கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் உள்பட 3 பேர் கைது !

சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-03 05:03 GMT

கைது

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு சிலர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சேலம் தாதகாப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்து சேலத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், சேலம் தாதாகப்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் (வயது 33), ஹரிகிருஷ்ணன் (21), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஸ் (23) ஆகியோர் என்பதும், இவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் என்பவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவன் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கைதான சிவசுப்பிரமணியம், சதீஷ் ஆகியோர் மீது சேலம் மாநகரில் கொலை, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Tags: