ஆரணியில் கனமழையால் 350 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

ஆரணி பகுதிகளில் பெய்த கனமழையால் 350 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Update: 2023-11-29 09:19 GMT

ஆரணியில் கனமழையால் 350 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதிகளில் தொடர் கனமழையால் 350 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் கனமழையும், சில பகுதிகளில் விட்டுவிட்டு லேசான மழையும் வருகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில், ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டார பகுதிகளில் சம்பா பட்டத்தில் ஆர்.என்.ஆர்., மகேந்திரா 53, கோ 51 உட்பட பல்வேறு நெல் ரகங்களை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த நெற்பயிர்கள் விளைந்து தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்தும் வருகின்றனர்.

ஆனால், தொடர் மழை காரணமாக விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆரணி, மேற்கு ஆரணி, கண்ணமங்கலம், களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அதிகப்படியான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரணி அடுத்த சேவூர், அடையபலம், அகராப்பாளையம், ரகுநாதபுரம், தச்சூர், அரியப்பாடி, காமக்கூர், மேல்சீசமங்கலம், சிறுமூர், வேலப்பாடி, ஆதனூர், மட்டதாரி, பனையூர், விண்ணமங்கலம், தெள்ளூர், ஆகாரம், விளைசித்தேரி, வெட்டியாந்தொழுவம், களம்பூர், அம்மாபாளையம், குண்ணத்தூர், பையூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 350க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், அறுவடைக்கு தயாராகியிருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி, வயல்களில் சாய்ந்து கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து பயிரிட்ட நிலையில் அறுவடை செய்யும் நேரத்தில் சேதமடைந்துள்ளதால், பயிர் செய்த முதல்கூட எடுக்க முடியவில்லை. நெல் மணிகள் நிலத்தில் நாற்றாக முளைத்து வருவதால் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரணி, மேற்கு ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் மழையால் சேதமடைந்துள்ள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News