அண்ணன், தம்பி கொலை வழக்கில் மேலும் 4 பேர் சரண்
சிவகங்கை அருகே அண்ணன், தம்பியை வெட்டி கொலை செய்த மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்
Update: 2024-07-05 06:37 GMT
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சி குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா (25), சுபாஷ் (23) ஆகியோர் ஜூன் 30 -ல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் சிவகங்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பணங்குடியில் கடந்த மாதம் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த வாரம் கொல்லங்குடி அருகே கல்லனை பகுதியில் பதுங்கி இருந்த ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் 8 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து, காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காளவாசலைச் சேர்ந்த திவாகர் (23), சாஸ்திரி தெருவைச் சேர்ந்த வாணிகருப்பு மனைவி மதுமதி (26), சுந்தரநடப்பைச் சேர்ந்த சந்தோஷ் (23), நகரம்பட்டியைச் சேர்ந்த ராம்ஜி (21), யுவராஜ் (22), அருண்குமார் (30), ஒக்கூரைச் சேர்ந்த அபினேஷ் (22) ஆகிய 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், புதுப்பட்டி சக்தி மதன்(21), சிவகங்கை முத்துக்கருப்பன் செல்வக்குமார் (28), சிவகங்கை கொட்டகுடி சபரிநாதன் மகன் முத்து பாண்டி (21), சிவகங்கை கொட்டகுடி கார்த்திகைராஜா மகன் மணிகண்ட பிரபு (22) ஆகியோர் சிவகங்கை குற்றவியல் நீதித்துறை நடுவர்(எண்-1) நீதிபதி அனிதா கிரிஸ்டி முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களை அனைவரையும் வருகிற 18.7.2024 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீஸார் இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.