5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும்
ஏப்ரல்.26(இன்று) முதல் ஏப்ரல் 30 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்திவரும் நிலையில், அடுத்த 5 நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துவருகிறது. இந்த நிலையில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் திணறி வருகின்றனர். ஏப்ரல்.26(இன்று) முதல் ஏப்ரல் 30 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 - 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஏப்.30 மற்றும் மே.1ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து நாள்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.