மீனவ கிராமத்தில் 5 கோவில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் நடந்த 5 கோவில்களின் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் தனித்தனியே உள்ள பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ பிடாரியம்மன் கோவில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில் ஆகிய 5 கோயில்கள் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து பழமை மாறாமல் கட்டி முடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவிலில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இந்நிலையில் கும்பாபிஷேக திகனமானஇன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று முதலில் பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோவிலில் கடங்கள் சென்று கோயிலை வலம் வந்து கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து. காளியம்மன் கோவில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ பிடாரியம்மன் கோவில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில், ஆகிய கோயில்களின் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் சூரியனார் கோவில் ஆதினம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.