பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம்:ரூ.1.40கோடி நிலத்தை விற்பனை செய்தவர் கைது

பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.40 கோடி நிலத்தை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-04 16:13 GMT

கோப்பு படம் 

பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம் மூலம் ரூ.1.40 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் நிலத் தரகரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (75). இவர் தனது மகள் கோபிதாவுக்கு பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான 1,980 சதுரடி நிலத்தை பொது அதிகாரம் பெற்ற ராமகிருஷ்ணன் என்பவரின் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு நிலத் தரகர்களான கார்த்திக், சரத்பாபு உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்கிடையில் சம்பத் வாங்கிய நிலத்தில் பிரச்னை இருப்பதாக பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் கூறியுள்ளனர். 

 இதையடுத்து, சம்பத் அங்கு சென்று விசாரித்த போது, சந்திரன் போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் ராமகிருஷ்ணன் பொது அதிகாரம் பெற்று விற்பனை செய்து தெரிய வந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூ.1.40 கோடி எனக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பத் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். 

ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிலப் பிரச்னை தீர்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் லதா மகேஸ்வரி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக கொரட்டூர், டி.வி.எஸ் நகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்த சரத்பாபு (36) என்பவரை புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் போலீஸôர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News