ஜவுளி அதிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி !

புற்றுநோய் மருந்து தருவதாக கூறிசேலம் ஜவுளி அதிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-27 11:55 GMT

கைது

சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ்குமார் (வயது 28). இவர் பழைய பஸ் நிலைய பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அருகே உள்ள மருந்து விற்பனை கடையில் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (30) என்பவர் ஊழியராக வேலை பார்த்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி நண்பர்கள் ஆகினர்.

இந்த நிலையில் சதீஷ்குமார் தன்னிடம் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்து உள்ளது. எனவே அந்த மருந்தை விற்பனை செய்தால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஹரீஸ்குமாரிடம் கூறி உள்ளார்.

இதை நம்பிய அவர் ரூ.80 ஆயிரம் கொடுத்து உள்ளார். சில நாட்கள் கழித்து அதற்கான மருந்தை அவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி விற்பனை செய்த ஹரீஸ்குமாருக்கு லாபம் கிடைத்துள்ளது. தொடர்ந்து ஹரீஸ்குமார் ரூ.6½ லட்சத்தை சதீஸ்குமாரிடம் கொடுத்து புற்றுநோய் மருந்து தரும்படி கேட்டார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சதீஷ்குமார் அதற்கான மருந்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ஹரிஸ்குமார் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவத்தன்று சேலம் 3 ரோடு பகுதியில் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் மருந்து வாங்க கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ஹரீஸ்குமார் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், ஹரீஸ்குமாரை தாக்கினார்.

இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து ஹரீஸ்குமார் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News