நடந்து சென்ற தாய், மகனிடம் 6 பவுன் நகை பறிப்பு!
வேலூரில் நடந்து சென்றவர்களிடம் நகையை பறித்து சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-18 10:54 GMT
பெரம்பலூர் மாவட்டம் லாடாபுரத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி (42). இவர் தனது மகனுடன் கடந்த 14-ந் தேதி இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார். இதையடுத்து சித்ரா தேவி தனது மகனுடன் ஆட்டோவில் வேலூருக்கு வந்தார். பின்னர் வள்ளலாரில் இறங்கி இரவு 11 மணி அளவில் உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 3 பேர் பின்தொடர்ந்து சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்களில் ஒருவர் சித்ராதேவி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார். மற்றொருவர் சித்ராதேவியின் மகன் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், மகன் இருவரும் திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டனர். எனினும் திருடர்கள் நகையுடன் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.இதுகுறித்து சித்ராதேவி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பறிகொடுத்த நகையின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.