சேலம் குமரகிரி பகுதியில் காரில் கடத்திய 62 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது
சேலம் குமரகிரி பகுதியில் காரில் கடத்திய 62 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.
Update: 2024-06-03 10:53 GMT
சேலம் அம்மாப்பேட்டை அடுத்த குமரகிரி பகுதியில் சிலர் குட்கா பதுக்கி வைத்து கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் மற்றும் போலீசார் நேற்று குமரகிரி முருகன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற ஒரு காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கே.ஆர்.தோப்பூர் ரங்கநாதன் நகரை சேர்ந்த லிங்கராஜ் (வயது 37), இவரது நண்பரான குமரகிரிப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (34) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களது காரில் அரசால் தடை செய்யப்பட்ட 62 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் லிங்கராஜ் கே.ஆர்.தோப்பூரில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து குமரகிரி பகுதியில் வைத்து கார்த்திக்கிடம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.