வேலூரில் ஒரே நாளில் ரூ.7.20 கோடிக்கு மதுவிற்பனை
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 7.20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மார்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17,18,19 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. விடுமுறைக்கு பின்னர் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 3 நாட்கள் மது, பீர் கிடைக்காமல் அவதியடைந்த மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது, பீர் வகைகளை வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையே மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது, பீர் வகைகள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்தன. வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுப்பிரியர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி சென்றனர்.
அதனால் பெரும்பாலான கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகள் விற்று தீர்ந்தன. வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 106 டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 20 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக இங்கு ஒருநாளைக்கு ரூ.3½ கோடி மது, பீர் வகைகள் விற்பனையாகும். ஒரேநாளில் 2 மடங்கு விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.