முத்தாலம்மன் கோவில் 78 ம் ஆண்டு தேர் திருவிழா
செய்யூர் முத்தாலம்மன் கோவிலில் 78 ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது.
Update: 2024-05-19 12:27 GMT
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் 78 -ஆம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி கோவில் மற்றும் கிராம வீதிகள் மின்விளக்குகளாலும், வாழை, தோரணங்கள் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முத்தாலம்மன் சாமிக்கு அபிஷேக செய்து காப்பு கட்டுதல், கரகம் ஜோடித்தல், மகாதீப ஆராதனை, கரகம் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10 மணி அளவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அழகு குத்தி கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் சடல் குத்திக்கொண்டு வாகனங்களில் தொங்கிய படியும் அந்த கிராமத்தில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாண்டிச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்த்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாலம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் கரகாட்டம் ஒயிலாட்டம் நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை காலை கும்பம் படைத்தல், மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, நாடகம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.