நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 86,025 மாணவா்கள் பயன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 86,025 மாணவா்கள் திறன் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 86,025 மாணவா்கள் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா். மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில்,
நான் முதல்வன் என்ற முதல்வரின் கனவுத் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு திறன் சாா்ந்த பயிற்சிகள்அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 - 2023 மற்றும் 2023 - 2024-ஆம் கல்விஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல், கலை மற்றும் அறிவியல்,
ஐ.டி.ஐ., டிப்ளமோ என மொத்தம் 86,025 மாணவா்கள் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனா். 2022 - 2023 ஆண்டில் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற 36,220 மாணவா்களில் 5,443 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களில் பயிற்சி பெற்ற 27,050 பேரில் 2,479 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதேபோல் 2023 - 2024 ஆண்டில் பயிற்சி பெற்ற 3,488 பொறியியல் கல்லூரி மாணவா்களில் 100 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற 16,819 பேரில் 510 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும் 2023 - 2024 ஆண்டில் ஐ.டி.ஐ. மாணவா்கள் 1,537 மற்றும் பாலிடெக்னிக் மாணவா்கள் 911போ் பயிற்சி பெற்று வருகின்றனா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.