ரூ.99.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்
கல்லல் அருகே விசாலையங்கோட்டை ஊராட்சியில் ரூ.99.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விசாலையங்கோட்டை ஊராட்சியில், இன்றையதினம் (26.12.2024) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக, பெண்களின் முன்னேற்த்திற்கென கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் ஏழை, எளிய மகளிரைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்குதல், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைத்தல் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வறுமை ஒழிப்புச் சங்கத்தின் கீழ் இணைத்து தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திட பக்கப்பலமாக இருத்தல், தொழில் புரிய ஆர்வமாக உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார மையங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகளை துறை ரீதியாக மேற்கொண்டு, பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான வழிவகை செய்துள்ளார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பன்மடங்கு வளர்ச்சி பெற்று, பல்வேறு வகையான கடனுதவிகள் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையிலான திட்டங்களை திறன்பட செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கிராமப்புற பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை பொருத்தும் அமைகிறது என்பதை கருத்தில் கொண்டும், பெண்கள் பிறரை சார்ந்திராமல் தன்சார்பு நிலையை அடையும் வகையிலும், பொருளாதார ரீதியாக அவர்களது குடும்பத்திற்கு பயனுள்ள வகையிலும் அடிப்படையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017-2018ல் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விசாலையன்கோட்டை ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணி நிறைவு செய்யப்படாமல் இருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021ல் ஆட்சிபொறுப்பேற்ற சமயத்தில் நான் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தேன். அச்சமயம் இக்கட்டிடத்திற்கான கட்டுமானப் பணியினை நிறைவு செய்திடும் பொருட்டு, ரூ.40.00 இலட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.99.16 இலட்சம் மதிப்பீட்டில் இக்கட்டிடம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு சிறந்த முறையில் கட்டி முடிக்கப்பட்டு, இன்றையதினம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில் கிராமப்புறங்களில் சாலை, மின்சார இணைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மட்டுமன்றி, மகளிர் மேம்பாட்டிற்கும் அடிப்படையான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு அவர்களுக்கு பயனுள்ள வகையில், இதுபோன்ற மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்கள் பல்நோக்கு மையங்களாகவும் செயல்படுகிறது. விசாலையங்கோட்டை ஊராட்சிக்கு ஆண்டிற்கு ரூ.14 இலட்சம் வருமானம் பெறப்படுகிறது. அதனடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.56.00 இலட்சம் வரி வசூல் பெறப்பட்டுள்ளது. இவ்வூராட்சியில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 89 வளர்ச்சி பணிகள் ரூ.04.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, அதில் 76 பணிகள் நிறைவுபெற்று பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 13 பணிகள் நடைபெற்று முடிவுரும் தருவாயில் உள்ளது. இதுதவிர, நெடுஞ்சாலைத்துறையின் சார்பிலும் ரூ.08.50 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியும் நிறைவுபெற்று பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்று, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சி அளவிலும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நகர்ப்புறங்களுக்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவைகள் அறிந்து, அவர்களை பயன்பெற செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதல் தேவைகள் இருப்பின், அத்தேவைகள் அனைத்தும் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது தேவைகளை அந்தந்த பகுதிக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாக எடுத்துரைத்து, தங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் மற்றும் தங்களது ஊராட்சியின் மேம்பாட்டிற்கும் அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, விசாலையங்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் சொர்ணம், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், ஒப்பந்ததாரர் (MP கண்ட்ஸ்ரக்சன்ஸ்) மாணிக்கவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.