இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி பலி
இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி பலியானர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் சுப்பையன். இவருடைய இளைய மகன் சுதாகரன் (41). வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் சிக்கிய சுதாகருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் மாலை அவர் பிலாக்கோடு பாறை குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு சுதாகரனின் ஆடைகள் குளத்தின் கரையில் இருந்துள்ளன.
இதனால் சுதாகரன் குளத்தில் மூழ்கி இருக்கலாம் என்று கருதி அவர்கள் குளத்திற்குள் தேடினர். அப்போது குளத்தில் மூழ்கிய நிலையில் கிடந்த சுதாகரனை கண்டுபிடித்து உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதாகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சுதாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சுதாகரன் தாயார் நேசம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.