அமைச்சர்களை வரவேற்க சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் விழுந்து விவசாயி காயம்
Update: 2023-12-15 06:19 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அகரத்துபட்டியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுசூழல் அணி நிர்வாகி சரவணக்குமார் இல்ல திருமண விழா அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வரும் திமுகவினர் மற்றும் அமைச்சர்களை வரவேற்பதற்காக காந்திநகர் பகுதியில் திருச்சுழி சாலையில் வரிசையாக சாலையோரம் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. ஏராளமான பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சாத்தூர் அருகே செவல்பட்டி காத்திகேயன்நகரை சேர்ந்த சண்முகவேல்(39) என்ற ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் விவசாயி அருப்புக்கோட்டை காந்தி நகரில் தனது உறவினர் இல்ல கிரகப்பிரவேசம் நிகழ்வுக்காக தனது உறவினர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கிரகப்பிரவேச நிகழ்வை முடித்துவிட்டு சண்முகவேல் இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது காந்தி நகர் திருச்சுழி சாலையில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் செண்டர் அருகே சென்று கொண்டிருக்கும் போது திருமண நிகழ்விற்காக சாலையோரம் நடப்பட்டிருந்த கொடிக்கம்பம் ஒன்று திடிரென சாய்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகவேல் முகத்திலேயே விழுந்தது. இதில் சண்முகவேலின் வாய்க்கிழிந்து 5 பற்கள் உடைந்தது. இதனை அடுத்து சண்முகவேல் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு வாயில் தையல் போடப்பட்டு பேச முடியாத நிலையில் உள்ளார். இது குறித்து சண்முக வேல் உறவினர்கள் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடி கம்பம் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி பற்கள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சண்முகவேல் உறவினர்கள் கூறுகையில் கொடிக்கம்பம் மிக கனமாக இருந்ததாகவும் அது வேறு யாரேனும் குழந்தைகளின் மீது விழுந்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்கும் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.