மகனை அடித்து கொன்ற தந்தை
நித்திரவிளை அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்து கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜினு 36, ஜிஜின் 34, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களில் மூத்த மகன் ஜினு Mphil பட்டப்படிப்பை முடித்து கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருடைய மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் ஜினுவுக்கு திருமண வரன்கள் பார்க்க துவங்கி உள்ளனர். ஆனால் வரன்கள் ஏதும் கைகூடாமல் போனதால் விரக்தியடைந்த ஜினு அதனை மறக்க மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். நாளடைவில் மதுவிற்கு அடிமையான ஜினு வேலைக்கு செல்வதை முழுமையாக நிறுத்திவிட்டு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை செல்வராஜ் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வந்த ஜினுவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து செல்வராஜ் கதவை பூட்டி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜினு கதவை உடைத்து திறக்க முயன்றபோது கதவை திறந்து வெளியே வந்த செல்வராஜை ஜினு சைக்கிள் செயினை கொண்டு தாக்க முயன்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த தேங்காய் தொலிக்கும் கம்பியை கொண்டு தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஜினு சுருண்டு கீழே விழுந்து துடிதுடிக்க இறந்துள்ளார் இரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதை கண்டு செய்வதறியாது திகைத்த செல்வராஜ் காலை வரை நேரத்தை கடத்திய பின் நேராக கொல்லங்கோடு காவல்நிலையத்திற்கு சென்று தனது மகனை தான் அடித்து கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து காவல்நிலையத்தில் அமர வைத்துவிட்டு சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் இறந்த நிலையில் ஜினு கிடந்துள்ளார் இதனையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது