பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியையொட்டி ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி
பல்லடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒட்டி ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
Update: 2024-02-25 08:43 GMT
திருப்பூரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை ஒட்டி ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி பல்லடத்தில் நடைபெற்றது. மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் மாதப்பூரில் வருகின்ற 27ஆம் தேதி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பணிகள் மாதப்பூர் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய நிலையில் சூலூருக்கு விமானம் மூலம் வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தர உள்ளார்ன் இதற்காக மாநாடு நடக்கும் மைதானத்தில் 3 ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சூலூர் விமானப்படை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் சோதனை முறையில் கொண்டுவரப்பட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் இறக்கி முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் 16 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் 27ஆம் தேதி பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.