கோவில் குளத்தில் சடலமாக மிதந்த நில புரோக்கர்
கோவில் குளத்தில் மிதந்த சடலமாக மிதந்த நில புரோக்கர் குறித்து இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோவில் பகுதியில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. கோவில் குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் குளத்திற்குள் இறங்கி பிணத்தை மீட்டனர். விசாரணையில் பிணமாக மிதந்தவர் ஆழ்வார் கோவில் சீதக்கரை மணி என்ற சுப்பிரமணி (76) என்பது தெரிய வந்தது. இவர் நில புரோக்கராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேட்டி சட்டை அணிந்த நிலையில் குளத்தில் பிணமாக மிதந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்பிரமணி அடித்துக் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.