ஆலங்குடி அருகே பள்ளியில் பல மாதங்களாக குடிநீரின்றி தவிப்பு!
ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்கலம் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பல மாதங்களாக குடிநீரின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-15 06:22 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்கலம் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பல மாதங்களாக குடிநீரின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இங்கு பழுதடைந்துள்ள மின் மோட்டாரை மாணவர்களின் நலன் கருதி விரைந்து சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். பள்ளி அருகிலேயே அங்கன்வாடியும் உள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பள்ளியருகே அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் மற்றும் இதர தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்த ஆழ்குழாய் கிணற்றின் மின் மோட்டார் பழுதானது. இதனால், மாணவ, மாணவிகள், அங்கன்வாடி குழந்தைகள் குடிநீரின்றியும், கழிப்பறையை பயன்படுத்த முடியாமலும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து, பள்ளிக்கும், அங்கன்வாடிக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும்,அங்கன்வாடிக்கும் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.