ஜாதி ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் அவசியம்!
ஜாதி ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் அவசியம்!
Update: 2024-07-15 07:20 GMT
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம் என்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் மரியம் தாவ்லே. புதுக்கோட்டையில் இந்த அமைப்பின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் பொதுச் செயலர் மரியம் தாவ்லே, தலைவர் பி.கே.ஸ்ரீமதி, துணைத் தலை உ.வாசுகி ஆகியோர் சனிக்கிழமைமாலை கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பொதுச் செயலர் மரியம் தாவ்லே கூறியது: கந்துவட்டிக்கு கடன் வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். 'நீட்' முறைகேடுகளைக் கண்டித்து ஜூலை 23-இல் 'அனைவருக்கும் ஆரோக்கியம் பெறும் உரிமை' என்ற முழக்கத்துடன் நாடு தழு இயக்கத்தை நடத்துகிறோம். பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், வறுமை, வேலையின்மையை எதிர்த்தும் வரும் ஆகஸ்ட் 6, 9, 15 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்தவுள்ளோம். ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவையில்லை என முதல்வர் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் மரியம் தாவ்லே. துணைத் தலைவர் உ. வாசுகி கூறியது: ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். மனமகிழ் மன்றங்கள்என்ற பெயரில் தனியார் மதுபானக் கூடங்கள் திறப்பதையும் எதிர்க்கிறோம். கள்ளச் சாராய இறப்பு நிவாரணத் தொகையை கொச்சைப்படுத்துவதை எற்க முடியாது என்றார் வாசுகி. பேட்டியின்போது சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, செயலர் ஏ. ராதிகா, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி, செயலர் பி. சுசிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.