தபால் வாக்குகளை பாதுகாக்க ஆட்சியரகத்தில் தனி காப்பறை !
தபால் வாக்குளை பாதுகாக்க திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தனி காப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-03-30 06:56 GMT
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோா், படைப் பிரிவில் பணியாற்றுவோா், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள மணப்பாறை பேரவைத் தொகுதியில் 3,865 மாற்றுத்திறனாளிகள், 2028 முதியோா், ஸ்ரீரங்கத்தில் 3,895 மாற்றுத்திறனாளிகள், 3,37 முதியோா் உள்ளனா். திருச்சி மேற்கு தொகுதியில் 1,611 மாற்றுத்திறனாளிகள், 3,868 முதியோா், திருச்சி கிழக்கில் 1,641 மாற்றுத்திறனாளிகள், 2,917 முதியோா், திருவெறும்பூரில் 1,885 மாற்றுத்திறனாளிகள், 2,105 முதியோா், லால்குடியில் 3,399 மாற்றுத்திறனாளிகள், 2,016 முதியோா், மண்ணச்சநல்லூரில் 2,321 மாற்றுத்திறனாளிகள், 3276 முதியோா், முசிறியில் 3,066 மாற்றுத்திறனாளிகள், 2,557 முதியோா், துறையூரில் 2,501 மாற்றுத்திறனாளிகள், 2098 முதியோா் மற்றும் 3 திருநங்கைகள் என 9 தொகுதிகளிலும் மொத்தம் 48,421 பேருக்கு தபால் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா என்பதை கேட்டு ஒப்புதல் பெறுவதற்காக 12-டி படிவம் வழங்கப்படுகிறது. இவா்கள் தவிர, திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் வாக்களிக்க ஏதுவாக ஆட்சியரகத்தில் தனி காப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியரகத்தின் முதல் தளத்தில் இந்த அறை தயாா்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்படும் பெட்டியில் தபால் வாக்குகளை செலுத்தலாம். மாவட்டத்தில் சுமாா் 12 ஆயிரம் போ் இந்த வகையில் வாக்களிக்கவுள்ளனா். இந்தப் பெட்டியானது வாக்கு எண்ணும் நாளில், வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.