ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பெருட்களை வழங்கி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் உள்ளன. நடப்பு மாதம் அதிகளவிலான விடுமுறை மற்றும் தாமதமான வரத்து உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்களை உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி இன்று (26ம் தேதி) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டுறவு துறையில், சார்பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர் மேற்பார்வையில் ஒரு ஒன்றியத்திற்கு 5 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், வருவாய்த்துறையில், வட்ட வழங்கல் அலுவலர் மேற்பார்வையில் ஒரு தாலுகாவிற்கு 7 கடைகள் வீதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா, எடை போடும் தராசின் தரம், ரேஷன் கடைகளில் இருப்பில் உள்ள பொருட்கள் சரியான அளவில் உள்ளதா, கடையின் சுத்தம் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது.