அணையில் மூழ்கிய சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு
அருமனை அருகே சிற்றார் அணையில் மூழ்கிய சுற்றுலாப் பயணி தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.
Update: 2024-02-18 08:36 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிற்றார் அணை - 2 நீர்த்தேக்க பகுதி உள்ளது. தற்போது இந்த அணையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கேரள - தமிழக எல்லை பகுதியான ஆனப்பாறை என்ற இடத்தை சேர்ந்த ஜோஸ் என்ற சுப்பிரமணியன் (40) மற்றும் 3 நண்பர்கள் நேற்று மாலை சிற்றாறு - 2 அணை பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அணையின் நீர் பிடிப்பு பகுதியான சங்கரன் கடவு என்ற இடத்தில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். குளித்துக் கொண்டிருந்த போது சுப்பிரமணியன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து களியல் போலீசாருக்கும், குலசேகரம் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவானதால் தீயணைப்பு படையினர் தேடும் பணியை நிறுத்தி விட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணியை தொடங்கினார். தேடுதலுக்கு பின் சுப்பிரமணியம் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.