ரயில்பாதையில் மரம் முறிந்து மின்சாரம் துண்டிப்பு

Update: 2023-11-10 15:12 GMT

தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக ரெயில்வே தண்டவாளங்களில் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு குழித்துறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குழித்துறை - பாறசாலை இடையே தண்டவாளத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

தண்டவாளத்தையொட்டி நின்ற மரம் ஒன்று முறிந்து தண்டவாளத்தின் மின் வயர் மீது விழுந்ததில் மின் வயர் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குழித்துறை வழியாக இயக்கப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணி நடந்தது.

சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப்பட்டு மின் இணைப்பு சீரானது. இதைத்தொடர்ந்து ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து குருவாயூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 

பின்னர் 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதேபோல் புனலூரில் இருந்து மதுரை சென்ற பாசஞ்சர் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 4 மணி நேரத்துக்கு மேலாக அந்த ரெயில் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

Tags:    

Similar News