சேலத்தில் உள்ள தங்கும் விடுதியில் புதுக்கோட்டை தொழில் அதிபர் தற்கொலை

உருக்கமான கடிதம் போலீசாரிடம் Chocolate.

Update: 2024-12-22 05:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கலப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 17-ந் தேதி சேலத்துக்கு வந்தார். பின்னர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு சென்று தங்கினார். கடந்த 2 நாட்களாக அவரது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நேற்று அங்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் மற்றும் விடுதி ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் மேற்கூரையில் உள்ள கொக்கியில் வேட்டியால் ரமேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அறையில் ரமேஷ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதியிருந்த உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் உடல் உபாதை காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த தகவலை சென்னையில் உள்ள எனது தங்கை அமுதாவுக்கு தெரிவித்து விடுங்கள். மேலும் எனது உடலை சேலத்திலேயே அனாதை பிணமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ரமேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது தங்கை அமுதாவிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக சேலம் புறப்பட்டு வருவதாக கூறினார். அவரிடம் விசாரணை நடத்தினால் தான் ரமேஷ்குமாரின் குடும்பம் குறித்தும், எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்தும் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News