அணைக்கட்டு அருகே தவறான சிகிச்சையால் பெண்ணின் கால் செயல் இழப்பு
அணைக்கட்டு அருகே தவறான சிகிச்சையால் பெண்ணின் கால் செயல் இழந்துவிட்டதாக வாலிபர் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். அந்த மனுவில்,"எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணமானது.அதன் பின்னர் 2 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் கடந்த 2020ம் ஆண்டு எனது மனைவியும்,நானும் வேலூரில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைக்காக சென்றோம். அங்கு ரூ.3 லட்சம் வரை பணம் செலவழித்து சிகிச்சை பெற்று வந்தோம்.என் மனைவியிடம் கருத்தரிப்பு மையத்தினர் மருந்து, மாத்திரைகளை கொடுத்தனர். அவற்றை என் மனைவி சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டது. இது சாதாரண வீக்கம் தான் என அவர்கள் கூறினர்.இதை நம்பி நாங்கள் வேறொரு தனியார் மருத்துவமனையில் காலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய சிகிச்சைக்காக சென்றோம். அங்கு என் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் வலது கால் வீக்கம் ஏற்பட்டு செயலிழந்து போனது.தற்போது நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.தவறான சிகிச்சை அளித்த கருத்தரிப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என கூறியுள்ளார்.