அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை

மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையில் 12வயது சிறுவனின் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்தவனின் குடும்பத்திற்காக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2024-03-22 12:26 GMT

மயிலாடுதுறையில் குடல்வால் சிசிச்சை செய்யப்பட்ட சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை மூடவும், மருத்துவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்:- 50 நாள்களை கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டனம்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேலமங்கைநல்லூரைச் சேர்ந்தவர் ஆசிரியர் பாலசுப்பிரமணியன். 7-ஆம் வகுப்பு படித்துவந்த இவருடைய மகன் கிஷோர் வயிற்று வலி காரணமாக மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜனவரி 29-ஆம் தேதி அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பின்னர் சிறுவன் கிஷோர் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். அதிக மயக்க மருந்து செலுத்தியதாலும், மருத்துவர்களின் கவனக்குறைவாலுமே உயிரிழப்பு நேரிட்டதாக குற்றம்சாட்டிய சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், உயிரிழப்பு நேரிட்டு 50 நாள்களைக் கடந்தும் நடவடிக்கை இல்லாததைக் கண்டித்து, 'மயிலாடுதுறை கிஷோரின் மரணத்துக்கு நீதி வேண்டுவோர் கூட்டமைப்பு" சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட செயலாளர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் உரிமை இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் பாரதம், நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சிறுவனின் உயிரிழப்பு குறித்து உண்மைத்தன்மை அறிய உடனடியாக விசாரணை குழு அமைக்க வேண்டும், உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும், சிறுவனின் பெற்றோருக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 300-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட செயலாளர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளிதரன்"இறந்து போன சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் அமைக்கப்பட்ட விசாரணை குழு பற்றி விவரங்களை அளிக்க வேண்டும். பாரதிதாசன் என்ற மருத்துவர் மற்றும் மயக்குனர் பரணிதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்றார்.

Tags:    

Similar News