திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் இராசிபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.;

Update: 2024-06-25 06:48 GMT

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆளும் திமுக அரசின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அரசைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் இராசிபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் பி. தங்கமணி, அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளர்,முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, கட்சியின் மாவட்ட நகர நிர்வாகிகள் உட்பட பலரும், கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டு, கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement

அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சிணரின் ஆதரவோடு கள்ள சாராயம், போதை பொருட்கள் போன்ற உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் வெ. சரோஜா, ஆளும் திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம், சாராய விற்பனை அதிகரித்து ஏராளமானூர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை திமுக அரசு தடுக்கத் தவறிவிட்டது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சரோஜா பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர்/ அதிமுக அமைப்பு செயலாளர் மாவட்ட செயலாளர் பி. தங்கமணி, தமிழகத்தில் ஆளும் திமுக வினரின் ஆதரவோடு கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினரின் உதவியோடுதான் இந்த போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் ஆளும் திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காட்டுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கஞ்சா பல்வேறு இடங்களில் விற்பனை நடைபெறுகிறது. இதனை திமுக அரசால் தடுக்க முடியவில்லை. எனவே இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, தமிழகத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல் இருந்தாலே காவல்துறையினர் சுகந்திரமாக செயல்பட்டு போலி மதுபானம், கள்ள சாராயம், கஞ்சா, போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். பலமுறை காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிமுக ஆட்சியில் கள்ள சாராயம் இறப்புகள் இல்லை. அதிமுக அரசு அதனை முழுமையாக தடுத்தது. ஆனால் தற்போது, ஆளும் திமுக கட்சியினர் பின்னணியில் உள்ளதால்தான் தமிழகத்தில் கள்ள சாராயத்தை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் தான் மக்கள் கள்ள சாராயத்தை வாங்கி அருந்துகின்றனர்.

அரசு வருமானத்தை பார்க்காமல் மக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். பூரண மதுவிலக்கு என்பது அதிமுகவின் கொள்கை ஆகும். கடந்த அதிமுக ஆட்சியில் மதுபான கடைகள் படிக்கப்படியாக குறைக்கபட்டன. ஆனால் திமுக அரசு கடைகளை மூடாமல் f1,f2. ஆகிய கடைகளுக்கு அதிகமாக அனுமதி அளிக்கிறது. கடந்த முறை கள்ள சாராயம் சாப்பிட்டு மரணங்கள் ஏற்பட்ட பொழுது சிபிசிஐடி விசாரணை போடப்பட்டு அது அப்படியே உள்ளது. அதன் காரணமாக தான், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி செய்தியாளரிடம் பேசினார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பாஸ்கர், பொன். சரஸ்வதி, கலாவதி , மற்றும் பரமத்தி- வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சேகர், நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி. கந்தசாமி, ராசிபுரம் முன்னாள் நகர மன்ற தலைவர்,நகர கூட்டுறவு வங்கி தலைவர் நகர செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் கே.பி.எஸ்.சுரேஷ் குமார், வர்த்தகர் அணி செயலாளர் ராகா தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன், மகளிர் அணி வைரம் தமிழரசி, ராதா சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர்கள், இன்னாள் கவுன்சிலர்கள், வார்டு கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், என நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News