சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, பொதுமக்களுக்கு துணிப்பைகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் நெகிழிப்பைகளை தவிர்ப்பது குறித்தும் எடுத்துரைத்து மஞ்சப்பைகள் இன்று வழங்கினார்.நெகிழிப்பைகள் இல்லாத உலகம் சாத்தியம்தான் என்றும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகளை தவிர்த்து மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜுலை-3ஆம் நாள் சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினத்தை கொண்டாடும் விதமாக அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர், நெகிழிப்பைகளை தவிர்ப்பது குறித்தும், துணிப்பைகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனைத்தொடர்ந்து நெகிழிப்பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்து வோம் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தருமபுரி நகராட்சியின் வணிகப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் மாற்றுப்பொருட்கள் குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்யலட்சுமி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) இளங்கோவன், மரு.சந்திரசேகர், உதவிபொறியாளர்கள் செல்வி. லாவண்ணயா, செந்தில்குமார், நகராட்சி கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.