பழுது நீக்கும் கடைகளில் குவியும் ஏர் கூலர்கள் மற்றும் மின்விசிறிகள் !
வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழுது நீக்கும் கடைகளில் மின்விசிறிகள் ஏர் கூலர் உள்ளிட்டவை அதிகளவு கொண்டு வரப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-04-26 11:34 GMT
தமிழகம் முழுவதும் இதுவரையிலும் இல்லாத அளவு வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு கோடை வெயில் கொளுத்தி வருகிறது . வெயில் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கத்தால் வயதான முதியவர்கள் மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவிலே வெயில் தாக்கம் அதிகம் உள்ள பகுதியாக மூன்றாவது இடத்தை ஈரோடு பிடிக்கும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயில் அதிகரிப்பதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில், தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்கு முழுமையாக வெயில் காலம் என்பதால் நிலைமை இன்னும் மோசமாகும் என இப்போது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் இளநீர் ,நுங்கு, வெள்ளரிக்காய், தர்பூசணி பழம், என இயற்கை பானங்கள் மேல் மக்கள் கவனம் திரும்பினாலும், தகிக்கும் வெயிலை சமாளிக்க பலரும் வெளியில் வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கி விடுகின்றனர். அப்படி வீடுகளில் முடங்கும் பொது மக்களுக்கு போதுமான அளவில் காற்றோட்ட வசதி இல்லாததால், தற்போது எலக்ட்ரானிக் கடைகளில் புதிதாக ஏர் கூலர், மின்விசிறிகள், சீலிங் ஃபேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்விசிறிகள், ஏர் கூலர் உள்ளிட்டவை பழுது ஏற்பட்டுள்ளதால், அதை சரி செய்து தர வேண்டும் என பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மின்விசிறி பழுது நீக்கும் கடைகளில், மின்விசிறிகள், ஏர்கூலர்கள் பழுது பார்ப்பதற்காக வாடிக்கையாளர்களால் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது . இது குறித்து மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்திருக்கும் நல்லசாமி என்பவர் கூறும் பொழுது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் பணியாற்றி வருகிறேன் . எப்போதும் வழக்கமான நாட்களில் அதிகளவு மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தான் மக்கள் அதிக அளவு பழுது நீக்கம் செய்ய வேண்டுமென கொண்டு வந்து தருவார்கள். கடந்த ஒரு மாதமாக அதிக அளவு மின்விசிறிகள், சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன், உள்ளிட்டவை பழுது நீக்கம் செய்வதற்காக பொதுமக்கள் கொண்டு வந்து தருகின்றனர் . தற்போது கூடுதலாக ஏர் கூலர் உள்ளிட்ட குளிர்சாதன பொருட்களையும் கொண்டுவருகின்றனர் . வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முடியாத பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். அப்படி வீட்டிற்குள் முடங்கினாலும் அனல் காற்றின் வெப்பம் தாங்க முடியாமல் கூடுதல் மின்விசிறிகளை பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது பழுதாகிய நிலையில் இருப்பதால் ,அதை முறையாக பராமரித்து வேகமான முறையில் மின்விசிறிகள் செயல்படும் வகையில் சரி செய்து தருமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர் .இதில் ஆச்சரியமாக ஒவ்வொரு வெயில் காலத்திலும் அதிகளவு அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட அம்மா ஃபேன் பழுது நீக்கம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கொண்டு வருவார்கள் . இந்த ஆண்டு ஏனோ அது பெரிய எண்ணிக்கையில் வரவில்லை. மேலும் கடந்த சில மாதங்கள் வரை குளிர்காலம் என்பதால் பொதுமக்கள் பெரிதாக மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வேறு வழி இன்றி எங்களிடம் பழுதான தங்களுடைய பொருட்களை கொண்டு வந்து தருகின்றனர். எங்களுக்கும் கூடுமானவரை வேலை வாய்ப்பு கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் பணியை மேற்கொள்கிறோம் . இருந்த போதிலும் கடையிலிருந்து பணியில் புரியும் எங்களாலேயே வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியாததால் மதிய நேரத்தில் கட்டாயமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் நாங்கள் பணி செய்வதை நிறுத்தி விடுகிறோம். ஏனெனில் அந்த அளவிற்கு வெயில் கொளுத்துவதால் மிகுந்த சோர்வான நிலை ஏற்படுகிறது. எதிர்காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வெயில் அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிந்து அதற்கு உரிய முறையில் மரம் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை நாம் செய்தால் வெயில் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.