ஆலங்குளம் பேருந்து நிலையம் பயணிகள் அவதி!

அடிப்படை வசதிகளற்ற ஆலங்குளம் பேருந்து நிலையம் பயணிகள் குடிநீரை இலவசமாக வழங்கவும் சுகாதார வளாகத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2024-02-05 08:46 GMT
அடிப்படை வசதிகளற்ற ஆலங்குளம் பேருந்து நிலையம் பயணிகள் அவதி
தென்காசி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரம் ஆலங்குளம். சுமாா் 60 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் முக்கிய நகரமாகவும், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி என ஏராளம் செயல்பட்டு வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் ஆலங்குளத்திற்கு வந்து செல்கின்றனா். இங்கு வந்து செல்லும் பயணிகளுக்கு அடிப்படைத் தேவையான குடிநீா் வழங்கும் கை பம்பு இயந்திரம் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அது கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதனால் பயணிகள் அருகில் உள்ள கடைகளில் வழங்கப்படும் குடிநீரை வாங்கிப் பருக வேண்டிய சூழல் உள்ளது. மேலும் பயணிகள் பயன்படுத்தி வந்த இலவச கழிப்பறை, மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் அதை பராமரிக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து அது பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 2 மாதங்களுக்கு முன்னா் இடித்து அகற்றப்பட்டது. இதனால் பயணிகள் அருகில் உள்ள மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அந்த கழிவறை மிகவும் நெருக்கடியாகவும், காற்றோட்டமின்றியும் காணப்படுவதால், துா்நாற்றம் வீசி காணப்படுகிறது. மிகவும் அத்தியாவசியத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்கவும் சுகாதார வளாகத்தை விரைந்து கட்டி முடிக்கவும் பேரூராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Tags:    

Similar News