பாறைகளுக்கு இடையே சாராய ஊறல்; போலீஸ் அதிரடி
முள்ளுவாடி மலை கிராமத்தில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த முள்ளுவாடி மலைகிராமத்தில் இரண்டாவது நாளாக வேப்பங்குப்பம் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுக்காட்டில் இரு வேறு இடங்களில் சாராயம் காய்ச்ச ஊரல்கள் அமைத்திருப்பதாகவும், காய்ச்சிய சாரயம் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உடனடியாக முள்ளுவாடி மலைபகுதிக்கு சென்ற போலீசார் அருகேயுள்ள வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் கண்டதும் காட்டுப்பகுதியில் தப்பி ஓடினர். பின்னர், அங்கு அடர்ந்த முட்புதர்களுக்குள் இடையிலும் பாறைகளுக்கு இடையிலும் கள்ள சாராயம் காய்ச்ச சுமார் 10 பேரல்களில் இருந்த 2500 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் வீடு, நிலம் உள்ளிட்ட இடங்களில் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டர் கள்ள சாராயத்தையும் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர்.