மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குச் சீட்டு அலகுகள் ஒதுக்கீடு
மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குச் சீட்டு அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குக் கூடுதல் வாக்குச் சீட்டு அலகுகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மக்களவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மாவட்டத்துக்குள்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மேலாண்மை என்கிற மென்பொருள் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட குலுக்கல் முறையிலான ஒதுக்கீடு மாா்ச் 20 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வேட்பாளா்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. ஒரு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், ஒரு நோட்டா கொண்ட தாள் மட்டுமே பொருத்த முடியும். எனவே, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தஞ்சாவூா் மாவட்ட எல்லையிலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 வாக்குச் சீட்டு அலகுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த இரண்டாவது வாக்குச் சீட்டு அலகுகளைப் பிரிப்பதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மேலாண்மை என்கிற மென்பொருள் மூலம் துணை குலுக்கல் முறையிலான ஒதுக்கீடு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 361 வாக்குச் சீட்டு அலகுகளும்,
கும்பகோணம் தொகுதிக்கு 351 வாக்குச் சீட்டு அலகுகளும், பாபநாசம் தொகுதிக்கு 346 வாக்குச் சீட்டு அலகுகளும் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது.