வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்கு சாவடி அலுவலர்கள், மற்றும் காவல்துறையினருக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

Update: 2024-04-17 08:10 GMT

பணியிடம் ஒதுக்கீடு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் மாதம் 4-ந் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்காக 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இத்தேர்தல் பணியில் வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள் என 9,436 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு 2 கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறை யில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சி.பழனி கலந்துகொண்டு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணியிடத்தை ஒதுக்கீடு செய்தார். அப்போது தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ்குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News