நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கிய இடங்களில் வண்டல் மண் படலம்
கும்மிடிப்பூண்டி பகுதியில் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கிய இடங்களில் வண்டல் மண் படலம் ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த கனழமையில் போது, மழை வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளை சூழ்ந்தது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை சிப்காட் சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலையில், 4 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்தது. அந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திரா நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழைக்கு பின் படிப்படியாக சாலையில் தேங்கிய மழை வெள்ளம் வடிந்து சென்றது. இருப்பினும் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தில், 200 மீட்டர் தொலைவிற்கு வண்டல் மண் படலம் காணப்படுகிறது.
மணல் திட்டு போல் காட்சியளிக்கும் அந்த படலம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால், வாகன ஓட்டிகள் மறு ஓரமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியை வாகனங்கள் கடக்கும் போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக அந்த வண்டல் மண் படலத்தை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.