முன்னாள் மாணவர்களின் 50வது ஆண்டு நிறைவு சங்கம விழா
செங்கல்பட்டு அரசினர் ஆதாரம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 1971 - 1973ல் பயின்ற மாணவர்களின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு சங்கம விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கடந்த 1971 முதல் 1973 வரை செங்கல்பட்டு அரசினர் ஆதார ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 120 மாணவர்களின் 50 வது ஆண்டு நிறைவு சங்கம விழா காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் முத்துப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் தங்கள் பயிற்சி காலம் மற்றும் பணியாற்றிய இடங்களில் நடைபெற்ற சுவையான நிகழ்வுகளை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தற்போது உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கல்வி வளர்ச்சிக்காக செயல்படுவது எனவும், காலம் சென்ற தமது நண்பர்கள் குடும்பங்களை இதில் இணைப்பது, சங்க உறுப்பினர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது மற்றும் அவர்களது பிள்ளைகளின் வேலைவாய்ப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது, மருத்துவ ஆலோசனைகளை கூறி மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதில் கலந்துகொண்ட 60 ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் மற்றும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் குமரவேல், ஜீவரத்தினம் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.