மாவட்ட விளையாட்டு அரங்கில் மறைக்கப்படாத கல்வெட்டு
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கு மற்றும் ஆர்ஓ குடிநீர் மையத்ததில் உள்ள கல்வெட்டுகள் மறைக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து, காஞ்சி புரம் மாவட்டத்தில், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள், அரசு அலுவலகம், பயணியர் நிழற்குடை, உயர்கோபுர மின்விளக்கு கல்வெட்டுகளில் உள்ள முன்னாள் முதல்வர், முதல்வர், எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை தேர்தல் அதிகாரிகள் மறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, ஒரு வாரத்திற்கு மேலாகியும், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், வளைகோல் பந்து மைதான சுற்றுச்சுவரில் உள்ள காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்படவில்லை. அதேபோல, விளையாட்டு அரங்கில், கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ஆர்ஓ, குடிநீர் மையத்தில் உள்ள காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் பெயர் மறைக்கப்படவில்லை.
மாநகராட்சி முழுதும் நகர்வலம் வரும் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வந்து செல்லவில்லையா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தேர்தல் நடத்தை விதிகளை, தேர்தல் அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.