குகநாதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம்
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோயில் என்ற பெயர் பெற்றது. இந்த கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கம் குமரிமவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் உயரமான சிவலிங்கம் ஆகும்.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் காலை 7 மணிக்கு அபிஷேகம்,7.30 மணிக்கு தீபாராதனையும்,9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் 10 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரருக்கு100 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.